Tuesday, December 28, 2010

இது யாருக்கான கல்வி ?

முன்னுரை அல்ல தொடக்கம்...
சில பல நாட்களாக நானும், வேறு வேறு அலை வரிசைகளில் இருக்கும் என் நண்பர்களும் செயல் படுத்த நினைத்த ஒரு விடயம், அனைவரும் இணைந்து அல்லது அனைவரையும் இணைத்து எழுதுவதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்துவது.
அதற்கான ஒரு விதைதான் இந்த "யாருக்கான கல்வி" ...

கடந்த ஒன்பது ஆண்டுகளாக என் நெருங்கிய நண்பரும், மக்கள் பணியே முழு நேர பணியாக மாற்றி கொண்ட களப்பணியாலரான பிரபாகரன் அவர்களை அணுகி கேட்டபோது மகிழ்வோடு இந்த சுமையை ஏற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை வாழ்வு கல்வியால் மட்டுமே சாத்தியம் என்பதை தீர்க்கமாக நம்பும் பிரபாகரின் இந்த யாருக்கான கல்வி உங்களுக்குள் கேள்விகளையும் விவாதங்களயும் தோற்றுவிக்கும் எனில் இந்த விதை விருச்சமாகும்.

நம்பிகையுடன்......
ஜோன்ஸ்

இது யாருக்கான கல்வி ?
பா.பிரபாகரன்


"மாணவர்கள் ஒன்றும் அறியாதவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை முட்டாளாக்குவது நம்முடைய கல்வித்திட்டம் தான்." இங்கிலாந்து நாட்டை சேர்ந்த "பெட்ட்ரென்ட் ரசல்" கல்வியை பற்றி இப்படி சொன்னது மேலை நாட்டு கல்வி முறையை பற்றி தான், ஆனால் மேற்கத்திய கல்வி முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மீது திணிக்கும் இந்த கல்வி திட்டத்திற்கும் பொருந்துமாறு உள்ளது.

இந்த நாட்டின் தலைஎழுத்தை மாற்றக்கூடிய சக்தி கல்விகுத்தான் உண்டு. கல்வி தான் ஆற்றல் , கல்வி தான் அறிவு, கல்வி தான் வலிமை, கல்விகற்பது அடிப்படை உரிமை, கல்வியை மறுப்பது மனித உரிமை மீறல், என்றெல்லாம் அரசாங்கம் அறிவிப்பு செய்து விட்டு, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களும், ஏழைகளும் கல்வி நிறுவனங்கள் பக்கமே போக முடியாத படி கட்டணத்தை உயர்த்தினால், இவர்கள் கல்வியை கற்பது எப்படி? அதுவும் சுயநிதி கல்லூரிகள் தங்கள் விருப்பம் போல் வசூலித்து கொள்ள இந்த அரசே வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. ஆக யாரெல்லாம் பணம் வைத்திருக்கிறார்களோ அவர்களை மையப்படுத்தி தான் நம்முடைய கல்வி. இதுவும் ஒரு நவீன பார்பனியம் தான். எப்படிஎனில் பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்பது மனுநீதி, பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்பது புது (ஆ)நீதி.

நம்முடைய கல்வியைப் பொறுத்த வரையில் எப்படி எழுதுவது, எப்படி எழுத்து கூட்டி வாசிப்பது என்ற எழுத்தறிவை மட்டும் தந்து இருகிறதே ஒழிய 'கல்வி' என்பது எங்குமே கற்று தரப்பட வில்லை என்று தான் சொல்லவேண்டும். அல்லது சொல்ல முடியும்.ஏனெனில் சமூகத்தின் தேவை என்ன? மாணவர்கள் எதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளாமலேயே கல்வித் திட்டம் தயாரிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த கல்வியாளர் 'பவுலோ பிரைரே' உண்மையான கல்வி என்பது ஒடுக்கப் பட்ட மக்கள் (அதிகாரத்தை) ஆற்றலை பெறுவதற்கு உரிய முயற்சியாக இருக்க வேண்டும் என்று கூறுவார். அனால் நம்முடைய கல்வித் திட்டத்திலோ ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய செய்திகள், வரலாறுகள், அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்கள், அனுபவித்த கொடுமைகள் எல்லாம் மறந்தும் இடம் பெற்றிடக் கூடாது என்பதிலே கல்வியாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இந்த நாட்டிலே பெண்கள் மேலாடை அணிவதற்கு நடைபெற்ற போராட்டங்கள்,கூலி உயர்வு கேட்டதற்காக 44 தலித்துகள் எரிக்கப்பட்ட நிகழ்வுகள், சாதியை சமுக ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க மேற்கொண்ட செயல்களெல்லாம் ஏன் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.? இந்நிகழ்ச்சிகள் வரலாறுகள் இல்லையா..? இவற்றை கல்வி கற்கும் மாணவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாதா.? காந்தியை தேசப்பிதா மகாத்மா என்றெல்லாம் ஆரம்பக்கல்வியில் இருந்து மேற்படிப்பு வரை வரிக்கு வரி போட்டு பெருமை அடித்துக் கொள்ளும் நம்முடைய கல்வித் திட்டம் தலித் தலைவர்களின் வரலாற்றை ஏன் பாடத்திட்டத்தில் சேர்ப்பதில்லை.? ஏனெனில் இவையெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வோடு தொடர்பு கொண்டிருக்கிறது. சுபாஸ் சந்திர போஸ் பற்றி ஏன் பாடத்தில் இல்லை? பகத் சிங் பற்றி ஏன் இல்லை? காங்கிரசின் வண்டவாளம் தெரிந்து விடும் என்பதாலா?

மாணவர்கள் எதனைக் கற்க வேண்டும் எதனை கற்க கூடாது என்பதிலே நம்முடைய கல்வி சில வரையறைகளை வைத்திருக்கிறது. இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் சாதியமைப்பை தகர்க்க கூடிய எந்த ஒரு செய்தியையும் எந்த ஒரு கருத்தையும் இந்திய அரசு பாடமாக வைக்காது.ஏனெனில் இந்த அரசு என்பதே இந்து அரசு தான்.ஆனால் சாதியைத் தக்க வைக்க கூடிய புராண இதிகாசங்களெல்லாம் மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 'முக்கியமான' வரலாறுகள்.

இதைத் தவிரவும் பல்வேறு குளறுபடிகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக 12 ஆண்டுகள் பள்ளியில் படித்த மாணவன் எதைக் கற்றுக் கொண்டு கல்லூரிக் கல்விக்கு செல்கிறான்.? ஆரம்பக் கல்வி முறைக்கும் மேற்படிப்பு முறைக்கும் ஏதேனும் மாற்றங்கள் உண்டா? குழுவாக சேர்ந்து கற்கும் வாய்ப்பு நம் கல்வித் திட்டத்தில் ஏதேனும் ஓரிடத்தில் உள்ளதா.? எல்லோரையும் தனிமைப் படுத்தி கற்க வைத்து சக மாணவரோடு போட்டி போட வைப்பது தான் நம் கல்வி அமைப்பு. பிறகு எங்கிருந்து வரும் சமுகத்தில் குழு உணர்வு.? பள்ளியில் கற்பது தானே சமுகத்தில் பிரதிபலிக்கும்? தொழிலாளர்களை,தலித்துகளை,உழைக்கும் மக்களை, பெண்களை கீழ்த்தரமாக கருதும் எண்ணத்தை மாற்ற கல்வி என்ன செய்திருக்கிறது.? இந்தக் கல்வித் திட்டத்தில் இவர்களைப் பற்றிய அடிப்படைச் செய்திகளாவது பள்ளிப் பருவ கல்வியில் இடம் பெற்றுள்ளதா.? பின் எவ்வாறு இவர்கள் மீதான மதிப்பீடுகள் மாறும்.?

மலம் அள்ளும் தொழிலாளியை இழிவானவர்களாகவும் விவசாயிகளை இவர்களைவிட உயர்வானவர்களாகவும், அரசுப் பணியில் உள்ளவர்களை அதைவிட உயர்வானவர்களாகவும் பார்க்கும் பார்வை எப்படி வந்தது.?

சமூகப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கல்வியே பல நேரங்களில் சமூகப் பிரச்சினைக்கு காரணமாக அமைந்துவிடுவது வெட்கக்கேடு.

சரி.. இந்தக் கல்வியினால் நாம் பயனடையவில்லை நம்மைப் பற்றியும் பேசவில்லை நம்முடைய வாழ்க்கைக்கும் உதவவில்லை எனில் இது யாருக்கான கல்வி.?

Tuesday, May 4, 2010

தமிழன் என்று சொல்லாதடா !...

இந்த்த பிரபாகரனை நினைத்தால் கடுப்பாக வருகிறது , என்ன ஒரு மனுஷன் அவர். பொழைக்க தெரியாத ஆளு. பெத்த தாய கூட இருந்து பாத்துக்காம, எவனோ ஒருத்தனுக்காக உயிரை குடுத்த இவரை நினைச்சாலே.........

நேற்று தோழர் பாமரன் இன் செம்மொழி மாநாட்டுக்கு வருவோர் கவனிக்க படித்தேன் .. (http://pamaran.wordpress.com/)

தமிழனுக்காக தன் வாரிசையும், சொந்த பந்தங்களையும் கொடுத்துவிட்டு,
அனாதையாக இருக்குற ஒரு தாய்க்கு, நம்மால இதை விட மரியாதையை செய்து
விட முடியாது.

செய்தி இதுதான்..
மருத்துவ சிகிச்சைக்க இங்கு வந்த பிரபாவின் 80 வயது தாய் பார்வதி அம்மாள், தவறாக விசா வழங்கி விட்டதாக திருப்பி அனுப்பி வைக்கப் பட்டார்கள்.

நமக்கு இருக்குற 1008 வேளைக்கு இடைல யாரு இதலாம் கண்டுக்குறது..

பாராட்டு விழாக்களுக்கு இடையில, தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளயும் படுச்சுட்டு அரசியல் நடத்துற நம்ம பாச தலைவன்...

கொழுந்தியா வீட்டு நாய் காணாம போனதுக்கு ஊர்வலம், போராட்டம் நடத்தும் எதிர் கட்சிகள்....

நித்தியானந்தம் , அந்த நடிகையை எந்த இடத்தில தொட்டார்னு அம்பு குறி போட்டு காட்டும் ஊடகங்கள்...

IPL உலக கோப்பை , சனிகிழமை பீர் , காதலிக்கு (களுக்கு) கவிதை - என்று நானும் நம் நண்பர்களும் ....

நமக்கு இருக்குற 1008 வேளைக்கு இடைல யாரு இதலாம் கண்டுக்குறது....

Friday, March 12, 2010

வாழ்வும் மரணமும்........

ஜனவரி 29, வெள்ளி கிழமை , காலை 5 மணி , வீட்டில் இருந்து போன். என் மனைவி பேசினாள். வலி அதிகமானதால் hosptial லுக்கு வந்து விட்டதாகவும் சிசேரியன் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள் என்றும் ஆபரேஷன் தியேட்டர் இல் இருந்து சொன்னாள்.

அடுத்த அரை மணிநேரத்தில் அப்பா போன் செய்தார். சிங்க குட்டி பிறந்து இருக்கு (உடனே ஆம்பள பிள்ளை னு நினைச்சுடாதீங்க , இது பொம்பள சிங்கம் ...)

விஷயம் இது அல்ல , என்னுடைய நண்பர்கள் , நெருங்கிய உறவினர்கள்
அனைவரும் வாழ்த்து சொன்னார்கள் ..

"வெள்ளி கிழமை அதும் மஹா லட்சுமி பொறந்து இருக்கா ..."

"இன்னைக்கு நிறைஞ்ச பௌர்ணமி ..."

"அதுலயும், வருசத்தோட முதல் பௌர்ணமி ..."

"இன்னைக்கு நல்ல முகூரத்த நாள் , இனைக்கு பொண்ணு பிறந்தா

கோடிஸ்வரன் ஆகலாம் .."

".. .. "

இப்படி எத்தனயோ செய்திகள் இன்று முழுதும் வந்த வண்ணம் இருந்தது ...நான் ரொம்ப சந்தோசமாக இருந்தேன்.. அதற்கு இவை எதுவுமே காரணம் இல்லை , என் சந்தோசத்திற்கு காரணம் இன்று ஜனவரி 29 .....

கோக் குடிச்சுகிட்டு, 20 20 மேட்ச் பார்த்துகிட்டு , அப்ப அப்ப துக்கம் விசாரிச்சுகிட்டு மட்டும் இருந்த நமக்கிடையில், புத்தன் பூமியில் , செத்து போன சகோதரர்களின் சோகம் தாங்காமல், தன் உடலையே துருப்பு சீட்டாக்கி கரிந்து போன , தோழன் முத்து குமாரின் முதல் நினைவு நாள் இன்று ..

சுய புலம்பல்கள் , கனவுகள் , கடமைகள் .. எல்லாவற்றையும் தூக்கி எரிந்து
அவர் எரிந்து போன தினத்தில் , தனக்கான வாழ்கையை ஏற்படுத்தி கொண்ட,
முத்து குமாரை என் வாழ் நாள் முழுதும் நினைவில் கொள்ள எனக்கு வாய்பளித்த என் மகளுக்கு சொல்ல இந்த தறுதலை அப்பனிடம் ஒன்று இருக்கிறது .. அது ,

"போராடனும் .
சக மனுசனுக்கு எதிரா நடக்குற ஒவ்வரு தீமைக்காகவும் போராடனும் .
குறைந்த பட்சம் உன் எதிர்ப்பயாவது பதிவு செய் ...