Friday, June 29, 2012

தலைப்பில்லாத கவிதை...

அந்தி மாலை
என் மடியில் அவள்.
உன் கன்னத்தில் 
ஒரே ஒரு அடி, அடிக்கவா ?
என்றேன்.

கொஞ்சம் தயக்கத்தோடு 
சரி என்றவாறு 
தலையசைத்தாள்.

செல்லமாக 
ஒரு கன்னத்தில் 
அறைந்தேன்..

அடுத்தகணம்
அவள் செய்கையால் 
அதிர்ந்தேன்.

ஒருவித நடுக்கத்தோடு 
கண்ணீரை துடைத்துக்கொண்டே 
அவளை கட்டி பிடித்துக்கொண்டேன்..

அவள்
பைபிளை படித்தறியாத
புத்தனை பற்றி தெரியாத,
அகிம்சை எனவென்றரியாத,
என் இரண்டு வயது மகள்.

//
செல்லமாக 
ஒரு கன்னத்தில் 
அறைந்தேன்..

சிரித்துக்கொண்டே 
daddy இந்த கன்னத்துல்ல அடி 
என்று இன்னொரு 
கன்னத்தைக் காட்டினாள்.

அடுத்தகணம்
அவள் செய்கையால் 
அதிர்ந்தேன்.

ஒருவித நடுக்கத்தோடு 
கண்ணீரை துடைத்துக்கொண்டே 
அவளை கட்டி பிடித்துக்கொண்டேன்..


Friday, June 22, 2012

குழந்தைகள் உலகம்!..


இன்று இரவு விஜய் T V யில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் "அக்ரகாரம் ஸ்பெஷல்" லாம். என்ன கேவலமான நிகழ்வு. ஏன் சேரி ஸ்பெஷல் / தலித் ஸ்பெஷல் னு இவனுகளால போட முடியுமா ? இன்னமும் பார்ப்பானுகளுக்கு வால் பிடிக்குற பழக்கம் நம்மை விட்டு போகலைன்னு தான் சொல்வேன்.

அவர்களோட மொழி / கலாச்சாரம் / ... தான் உயர்ந்தது னு பிஞ்சு குழந்தைகளோட பொது புத்தியில் பதிய வைக்கிற மற்றுமொரு முயற்சிதான் இது மாதிரி நிகழ்சிகள்.

இசையும் / பாடல்களும் இன்னும் ஆதிக்க சாதிகளின் கைபிடிக்குள் இருக்கும் போது, ஒரு கருப்பு தோல் காரனின் குரல் எடுபடாமலேயே போய்விடுமோனு பயமா இருக்கு.

ஏற்கனவே தொலைகாட்சி வழி, குழந்தைகளோட உணர்வுகளையும் / உலகத்தையும் நசுக்கிடோம். இதில் சாதிய உணர்வை புகுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

குழந்தைகளுக்கு வாசிக்க கத்துக்குடுப்போம் / நேசிக்க கத்துக்குடுப்போம்.





Thursday, April 12, 2012

கிழக்கே போகும் ரயில் ...

நாள் : 10-04-2012
இடம் : செகிண்ரபாத் ரயில் நிலையம் 
நேரம் : மாலை 06:30

திண்டுக்கலில் இருந்து என்னை பார்க்க வந்திருந்த அம்மாவையும், பெரியம்மாவையும், ஊருக்கு அனுப்ப நான், என் மனைவி பானுவும், குழந்தையுடன் ரயில் நிலையம் வந்திருந்தோம்


எத்தனையோ பிரிவுகளையும் / கண்ணீர்களையும் சந்தித்த ரயில்நிலையத்தில் , எங்கள் பிரிவு சார்ந்த சொல்லாடல்களும் / மௌனங்களும் கரைந்து போனது.
ஒரு வரமாக , என் தாயுடன் சுற்றித்த்திரிந்த, என் குழந்தைக்கு பிரிவின் முதல் அனுபவம் கிடைக்கப்பெற்றதில் சந்தோசம்


சிறிது நேரத்தில் ரயில் எங்களை கடந்து போனது
வீட்டிற்கு போவதற்கு லோக்கல் ரயிலுக்காக காத்திருந்தோம். பானு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டாள். அருகில் இருந்த கடையில் தண்ணீர் இல்லாததால், குளிர்பானம் வாங்கினேன். (பெப்சி / கோக் னு நினைச்சுடாதீங்க, நம்மூர் காளி மார்க் மாதிரி இந்த ஊர் லோக்கல் cool drink)

MRP 25 ரூபாய் என்று இருந்தது. 30 ரூபாய் கொடுத்தேன்.கடைக்காரர் மீதி 2 ரூபாய் கொடுத்தார். 25 போக 5 ரூபாய் தரவேண்டும் என்றேன்குளிருட்டப்படதற்கு 3 ரூபாய் சார்ஜ் என்று சொன்னார். அப்படின்னா குளிருட்டபடாத போத்தல் கேட்டேன். அதுவும் அதே விலை / அனைத்து கடைகளிலும் 3 ரூபாய் அதிகம் என்றும் சொன்னார்.நான் விடுவதாய் இல்லை. அவரும் தருவதாய் இல்லை.

உடனே என் அலை பேசியை எடுத்து அந்த கடையின் ஸ்டால் எண் / உரிமையாளரின் பெயர் / அவர் அலை பேசி எண் என்று அனைத்தையும் பதிவு செய்வது போல் (சத்தமாக கூறிக்கொண்டே) பாவனை செய்தேன்.

மறு நொடி அந்த கடை காரர் , "சார்" என்று கூப்பிட்டார்... சரியான சில்லறையை முறைத்து கொண்டே கொடுத்தார். நான் எதுவும் பேசாமல் மீதி சில்லறையை வாங்கிக்கொண்டு, பானுவை நோக்கி நகர்ந்தேன்.

நடந்ததை அவளிடம் சொன்னேன்.. ஒருமாதிரியாக சிரித்தாள்.

பெருமை பட்டாளா? கோபப் பட்டாளா? கேவலமாக நினைத்தாளா ?

அந்த சிரிப்பின் அர்த்தம் இரண்டு நாளாகியும் இன்னும் விளங்கவில்லை. நானும் அவளிடம் கேட்கவில்லை.

ஆனால் எங்களுக்கான வண்டி வரும் வரை , திரும்பி திரும்பி, அந்த கடையையும், கடைக்காரனையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்...

Saturday, February 25, 2012

தமிழக காவல் துறையும், தொடர் கொலைகளும்..

வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக சொல்லி, 5 பேரை என்கவுண்டரில் சுட்டு கொன்றது காவல் துறை.. ஒரு சின்ன அறையில், சன்னல் வழியாக தாக்குதல் நடத்தியதாக கூறி, அனைவரையும் கண் மூடித்தனமாக சுட்டு கொன்றிருக்கிறது காவல் துறை. சரியா? தவறா? தேவையா? இல்லையா ? - இவை எல்லாம் தாண்டி, நமக்கான கேள்விகளையும் / எதிர்ப்புகளையும் பதிவு செய்வதே நம் நோக்கம்.

கடமை தவறாத தமிழக காவல் துறைக்கு...

- நூற்றுக்கும் மேற்பட்ட காவலாளிகள் இருந்தும் , ஐந்து பேரை உயிருடன் பிடிக்க முடியாதா?
- ஒருவர் மட்டும் அடையாளம் காண பட்ட நிலையில் அனைவரையும் எப்படி கொல்ல முடியும் ?
- அந்த ஐந்து பேரில் , ரெண்டு பேர் சமையல் காரணாகவோ / வேலை யாலாகவோ இருந்திருக்க வாய்ப்பு இருக்கு
- இதுவரை நடந்த எந்த என்கவுன்டரிலும் / எந்த காவலாளியும் இறந்ததாக தகவல் இல்லை.
- யாரையும் தண்டிக்க கூட உரிமை இல்லாத உங்களுக்கு / தீர்பிடும் உரிமையை யார் கொடுத்தது?

நீதி தவறாத தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ..,

- ஒவ்வரு என்கவுண்டரின் போதும், குரல் கொடுக்கிறீர்கள், ஆனால் நடவடிக்கை ??
- இதுவரை எந்த ஒரு காவல் துறை அதிகாரியாவது, தண்டிக்கப்பட்டு இருக்கிறரா?
- போலி என்று உங்கள் விசாரணையில் தெரியவந்த / அறிவிக்கப்பட்ட என்கவுன்ட்டர் எதாவது இருகிறதா?

சாட்சிகள் விசாரிக்க பட்டு / வாய்தாக்கள் வழங்கப்பட்டு / தரப்படுகிற தூக்கு தண்டனையை கூட ஏற்றுக்கொள்ள முடியாத எங்களுக்கு, உங்கள் என்கவுன்டர்கள் ஏற்படுத்துகிற உணர்வை வெளிபடுத்த வார்த்தைகள் இல்லை. குற்றங்கள் குறித்தும் / தண்டனை குறித்தும் பொதுமக்களின், பொது புத்தியில் இருக்கும் பதிவுகள் / சில நேரங்களில் இது போன்ற சம்பவங்களை ஆதரிக்கும் அபாயம் உண்டு என்ற அட்சமும் நம்மை தொற்றிகொள்கிறது.

இதேநிலை நீடித்தால் ,
நாளை நீங்களும் நானும் விசாரனைக்கு அழைத்து வரப்படலாம்..
தப்பிக்க முயன்றதாகவோ / தாக்க முயன்றதாகவோ கூறி சுடப்படலாம்.
தாக்க பட்டு (உயிர் பிழைத்த) காவல் அதிகாரி அரசு மருத்துவமனை யிலிருந்தும்
தேசிய மனித உரிமை கழகம், தங்கள் அலுவலகதிலிருந்தும்
தங்கள் தரப்பு நியாயங்களையும் / எதிர்ப்புகளையும் தரலாம்....
மற்றொரு நாளில்
நீங்களும் நானும் விசாரனைக்கு அழைத்து வரப்படலாம்..