Thursday, April 12, 2012

கிழக்கே போகும் ரயில் ...

நாள் : 10-04-2012
இடம் : செகிண்ரபாத் ரயில் நிலையம் 
நேரம் : மாலை 06:30

திண்டுக்கலில் இருந்து என்னை பார்க்க வந்திருந்த அம்மாவையும், பெரியம்மாவையும், ஊருக்கு அனுப்ப நான், என் மனைவி பானுவும், குழந்தையுடன் ரயில் நிலையம் வந்திருந்தோம்


எத்தனையோ பிரிவுகளையும் / கண்ணீர்களையும் சந்தித்த ரயில்நிலையத்தில் , எங்கள் பிரிவு சார்ந்த சொல்லாடல்களும் / மௌனங்களும் கரைந்து போனது.
ஒரு வரமாக , என் தாயுடன் சுற்றித்த்திரிந்த, என் குழந்தைக்கு பிரிவின் முதல் அனுபவம் கிடைக்கப்பெற்றதில் சந்தோசம்


சிறிது நேரத்தில் ரயில் எங்களை கடந்து போனது
வீட்டிற்கு போவதற்கு லோக்கல் ரயிலுக்காக காத்திருந்தோம். பானு குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டாள். அருகில் இருந்த கடையில் தண்ணீர் இல்லாததால், குளிர்பானம் வாங்கினேன். (பெப்சி / கோக் னு நினைச்சுடாதீங்க, நம்மூர் காளி மார்க் மாதிரி இந்த ஊர் லோக்கல் cool drink)

MRP 25 ரூபாய் என்று இருந்தது. 30 ரூபாய் கொடுத்தேன்.கடைக்காரர் மீதி 2 ரூபாய் கொடுத்தார். 25 போக 5 ரூபாய் தரவேண்டும் என்றேன்குளிருட்டப்படதற்கு 3 ரூபாய் சார்ஜ் என்று சொன்னார். அப்படின்னா குளிருட்டபடாத போத்தல் கேட்டேன். அதுவும் அதே விலை / அனைத்து கடைகளிலும் 3 ரூபாய் அதிகம் என்றும் சொன்னார்.நான் விடுவதாய் இல்லை. அவரும் தருவதாய் இல்லை.

உடனே என் அலை பேசியை எடுத்து அந்த கடையின் ஸ்டால் எண் / உரிமையாளரின் பெயர் / அவர் அலை பேசி எண் என்று அனைத்தையும் பதிவு செய்வது போல் (சத்தமாக கூறிக்கொண்டே) பாவனை செய்தேன்.

மறு நொடி அந்த கடை காரர் , "சார்" என்று கூப்பிட்டார்... சரியான சில்லறையை முறைத்து கொண்டே கொடுத்தார். நான் எதுவும் பேசாமல் மீதி சில்லறையை வாங்கிக்கொண்டு, பானுவை நோக்கி நகர்ந்தேன்.

நடந்ததை அவளிடம் சொன்னேன்.. ஒருமாதிரியாக சிரித்தாள்.

பெருமை பட்டாளா? கோபப் பட்டாளா? கேவலமாக நினைத்தாளா ?

அந்த சிரிப்பின் அர்த்தம் இரண்டு நாளாகியும் இன்னும் விளங்கவில்லை. நானும் அவளிடம் கேட்கவில்லை.

ஆனால் எங்களுக்கான வண்டி வரும் வரை , திரும்பி திரும்பி, அந்த கடையையும், கடைக்காரனையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்...